search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூரில் மழை"

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. #KarurRain
    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டை பொறுத்தவரை சம்பா சாகுபடிக்கு தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டு அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து கிடைத்து வருவதால் நெற்பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சம்பா சாகுபடியை பொறுத்தவரை நடவு பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. சில பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நிலையில் இன்னும் சில பகுதியில் நாற்றங்கால் விட்டு வைத்துள்ளனர்.

    இந்நிலையில் கரூர் மாவட்டம் மணவாசி, மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், மகிளிப்பட்டி, பிள்ளபாளையம் மற்றும் லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. மகிளிப்பட்டி, நந்தன் கோட்டை செல்லும் சாலையின் இருபுறம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.

    இப்பகுதியில் பாதிக்குமேல் நடவு பணிகள் முடிந்துள்ளது. இன்னும் சில விவசாயிகள் நாற்று பறித்து வைத்துள்ளனர். கொட்டி தீர்த்த மழையால் பல்வேறு பகுதியில் இருந்து வந்த தண்ணீர் இப்பகுதியில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது. மேலும் பறித்து வைத்திருந்த நாற்று பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

    இப்பகுதியில் அமைந்துள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தகுந்தவாறு வடிகால் வசதி இல்லாததால் விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    அதே போல பிள்ளபாளையம் மங்கம்மாள் சாலை பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் கனமழைக்கு சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    நெற்பயிர்களை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிவதற்குள் மழை தொடர்ந்தால் பயிர்கள் அழுகி சேதமாக அதிக வாய்ப்புள்ளது.

    மேலும் லாலாப்பேட்டை சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வந்து செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். #KarurRain
    ×